தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.27-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். அப்போது பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுக்குப்பின் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

வாக்குச்சாவடிகள் திருத்தியமைத்தல், மறு சீரமைத்தல் போன்ற பணிகள் கடந்த ஆக.22-ம்தேதி தொடங்கப்பட்டது. இப்பணிகள் அக்.9-ம் தேதி முடிவடையும். தொடர்ந்து தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.17-ல்வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அக்.27-ம் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல்வெளியிடப்படும் அன்றே வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும். அன்று முதல், டிச.12-ம்தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்களை வழங்கலாம். மேலும், இந்த காலகட்டத்தில் நவ.4,5 மற்றும் 18, 19 ஆகிய சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பம் பெறப்படும்.

அதைத் தொடர்ந்து, டிச.26-ம்தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறும். அதன்பின் அடுத்தாண்டு ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

மேலும், ‘www.voters.eci.gov.in <http://www.voters.eci.gov.in/>, <https://voterportal.eci.gov.in/>’ ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனி லும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், வரும் 2024 ஜன.1, ஏப்.1, ஜூலை 1 மற்றும் அக்.1-ம் தேதி களில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்யலாம். இந்த திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பமும் அளிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *