|
பெரியவர்கள், பெற்றோர் அறிவுரையை மாணவர்கள் ஏற்று நடக்க வேண்டும் சக்தி அம்மா பேச்சு![]()
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ‘வித்யாநேத்ரம்’ என்ற திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற ஸ்ரீமேதா, சூக்த யாகம் எனப்படும் சரஸ்வதி யாகம் நேற்று நடந்தது. சக்தி அம்மா தலைமை தாங்கினார். நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, ஸ்ரீபுரம் பொற்கோவில் இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாராயணி பீட மேலாளர் சம்பத் வரவேற்றார். நிகழ்ச்சியின்போது யாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பேனாவை சக்தி அம்மா தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினர். சிறுவர்கள், மாணவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் பிடிக்காத ஒன்று அறிவுரைகள். பாகற்காய் கசப்பது போன்று அறிவுரைகள் மாணவர்களுக்கு கசந்து காணப்படும். இதன் சிறப்பை ஒவ்வொரு மாணவரும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பெரிதும் உதவியாக இருப்பது அறிவுரைகள் தான். தாங்கள் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்பதற்காக தான் பெரியவர்கள், பெற்றோர் அறிவுரை கூறுகின்றனர்.
குழந்தைகள், மாணவர்களுக்கு மட்டுமே அறிவுரை கிடைக்கும். அதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்தால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம். படிக்கும் காலத்தில் மட்டுமே சரஸ்வதியின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பதல்ல. வாழ்க்கை முழுவதும் அவரது அனுக்கிரகம் கிடைத்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். வேத மந்திரங்களுக்கு தனி சக்தி உள்ளது. வேத மந்திரங்களை தினமும் சொல்லும்போது நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் அதிக சக்தியுடன் இயங்கும். வேதமந்திரங்களை முறையாக தினசரி உச்சரித்து வந்தால் கவனச்சிதறல் இன்றி கல்வி வளர்ச்சி அடையலாம். இது விஞ்ஞானப்பூர்வ உண்மையாகும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து நல்ல குடிமகனாக இருந்து நாட்டிற்கும், சமுதாயத்துக்கும் சேவை செய்ய வேண்டும்.
|
|